இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் சீன ராணுவம் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைத்துள்ள புகைப்படங்களை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் செயற்கைக்கோள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் அளித்த தரவுகளின் அடிப்படையில் ஹெலிகாப்டர் தளம் அமைந்துள்ள இந்தப் பகுதியில் டிசம்பர் 2023 வரை எந்த ஒரு கட்டுமானமும் நடைபெறவில்லை. ஆனால் ஜனவரி 2024-ல் தளத்துக்கான கட்டுமானங்கள் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன.
இந்தப் புதிய ஹெலிகாப்டர் தளம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் `அப்பர் சியாங்’ மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் நியிங்சியில் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் துருப்புகளை எல்லைப்பகுதியில் விரைவாக குவிக்கவும், எல்லையோரக் கண்காணிப்பில் அதிக வீரர்களை ஈடுபடுத்தவும் சீனாவால் முடியும்.
கடந்த செப்.12-ல் இந்தியா-சீனா இடையிலான உறவுகள் குறித்துப் பேட்டியளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், `சீனாவுடனான 75 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன, ஆனால் எல்லைப் பகுதியில் தற்போது சீனா மேற்கொண்டுவரும் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் என்பது பெரிய பிரச்னையாகும். 2020-ல் (கல்வான் தாக்குதல்) நடந்த தாக்குதல் குறித்த சில விஷயங்களில் இன்னும் எங்களுக்குத் தெளிவில்லை’ என்றார்.
கடந்த சில வருடங்களாக பிற நாடுகளுடனான எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாதிரி கிராமங்களைக் கட்டி வருகிறது சீனா. இதன் வழியாக பிற நாடுகளின் நிலங்களை ஆக்கிரமிக்கவும், அந்த நாடுகளின் எல்லைப்பகுதியில் அதன் இராணுவங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறது சீனா.
சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடி தரும் விதமாக சீனாவை ஒட்டியுள்ள இந்தியாவின் 4 வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பலவித முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது இந்தியா.