நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி: கவிழ்ந்தது நேபாள அரசு

2008-ல் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் தங்களின் ஐந்து வருட பதவிக்காலத்தை முழுமையாக வகிக்கவில்லை
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி: கவிழ்ந்தது நேபாள அரசு
ANI
1 min read

நேபாளத்தின் பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.

கடந்த 2022 நவம்பரில் 275 இடங்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு பொதுத் தேர்தல் நடந்தது. ஆனால் இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேபாள காங்கிரஸுக்கு 89 இடங்களும், நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிக்கு 78 இடங்களும், நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு 32 இடங்களும் கிடைத்தன.

இதை அடுத்து நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி போன்ற பிற கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.

 இந்நிலையில் கடந்த ஜூலை 3-ல் பிரதமர் புஷ்ப கமலுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி. இதை அடுத்து நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் பிரதமர் புஷ்ப கமல்.

ஆட்சியைத் தக்க வைக்க 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஜூலை 12-ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புஷ்ப கமலுக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் பதிவானதாக அறிவித்தார் நேபாள நாடாளுமன்ற சபாநாயகர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் பிரதமர் புஷ்ப கமல்.

நேபாள நாடாளுமன்றத்தில் 88 இடங்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் கட்சியும், 78 இடங்களைக் கொண்ட நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் தற்போது கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையில், நேபாள கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் கே.பி. சர்மா ஓலி நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. 2008-ல் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் தங்களின் ஐந்து வருட பதவிக்காலத்தை முழுமையாக வகிக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in