
நேபாளத்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி சர்மா ஒலி, குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல் ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்ததற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து இரு நாட்களாகப் போராடி வருகின்றனர். குறிப்பாக நேற்று (செப். 8) இளைஞர்கள் 'ஜென் சி போராட்டக்காரர்கள்' என்ற பெயரில் போராட்டங்களை முன்னெடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் பதவி விலகினார். இதையடுத்து அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகினர்.
இந்நிலையில், சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு இன்று (செப். 9) காலை அறிவித்தது. ஆனாலும், பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், கண்ணாடிகளை அடித்து உடைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தஹல், குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல் ஆகியோரின் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடன் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் அரசியல் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் அந்நாட்டில் ராணுவ ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Nepal | Gen Z Protest | Social Media Ban | Nepal youth protest | Kathmandu | KP Sharma Oli | Ram Chandra Poudel |