
நேபாளத்தில் பூதாகரமாக வெடித்த மக்கள் போராட்டத்தை எடுத்து சமூக ஊடகங்களின் மீதான தடைகளை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
நேபாளத்தில் இயங்கும் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் நோக்கில், அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக ஊடகங்கள் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு 7 நாட்கள் கெடு விதிப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 5 அன்று பதிவு செய்யாமல் இருந்த வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், நேபாள அரசை ஊழல் மிக்க அரசு என்று விமர்சித்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
குறிப்பாக இளைஞர்கள் 'ஜென் சி போராட்டக்காரர்கள்' என்ற பெயரில் போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதன் மூலம் அரசு பேச்சுரிமையை மறுப்பதாகக் குற்றம்சாட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட கீய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (செப். 8) ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட முயன்றனர். அப்போது அவர்களை கண்ணீர் புகை கொண்டு வீசி காவல் படையினர் தடுக்க முயன்றனர். பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்போராட்டம் உலக அளவில் பரபரப்பானது.
இந்நிலையில், சமூக வலைதளங்களின் மீதான தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தகவல் துறையின் அமைச்சர் பிரித்வி சுபா குருங், "மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக சமூக ஊடகங்களின் மீதான தடையை அரசு விலக்கிக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது. முன்னதாக தடை விதித்த முடிவின் மீது அரசுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நேற்று நடந்த கலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விசாரணைக் குழு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்
Nepal | Gen Z Protest | Social Media Ban | Nepal protest | Social Media Ban lifted |