
நேபாளத்தில் வன்முறைகள் நடந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, அந்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
நேபாளத்தில் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. குறிப்பாக சமூக ஊடகங்களை அந்நாட்டு அரசு தடை செய்த நடவடிக்கை இளைஞர்களைக் கொந்தளிக்கச் செய்தது. இதனால் எழுந்த போராட்டம், வன்முறையாக மாறியது. அதில், 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், கடந்த செப்டம்பர் 9 அன்று கே.பி. சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தற்போது சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி நேபாளத்தை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலான மௌனத்திற்குப் பிறகு, இன்று பொது நிகழ்வில் சர்மா ஒலி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களையும் அவர் சந்தித்தார். அவர் பேசியதாவது:-
நேபாளத்தில் தற்போது உள்ள அரசாங்கம் ‘ஜென் சி அரசாங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அரசியலமைப்பு விதிகளின்படி மக்களின் வாக்குகளால் உருவாக்கப்படவில்லை. நாசவேலை மற்றும் தீ வைப்புச் சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 அன்று நான் பதவி விலகியதற்கு முந்தய நாள், நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. அதை மேலும் அதிகரிக்காமல் இருக்க முயன்றேன். ஆனால் எதுவும் என் கையில் இல்லை என்பதை உணர்ந்தபோது நான் பதவியில் இருந்து விலகினேன். அதன் பிறகுதான் தீ வைப்பு, நாச வேலைகள், கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறின.
அதன் பின் என் பெயரைக் குறிப்பிட்டு வதந்திகள் பரப்பப்பட்டன. அதைக் கேட்ட மக்கள், “துப்பாக்கியைக் கொடுங்கள், வாளைக் கொடுங்கள், டிரோனைக் கொடுங்கள், அவரைக் கொல்கிறோம்” என்று சொல்லும் அளவு தூண்டப்பட்டார்கள். அதை ஊடகங்களிலும் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். நான் அப்படி என்ன செய்துவிட்டேன்? துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதும் நிலைமை குறித்து விசாரித்தேன். ரப்பர் தோட்டாக்கள் மட்டுமே சுடப்பட்டதாக என்னிடம் கூறப்பட்டது. பின்னர், 14 பேர் இறந்ததாக எனக்குத் தெரியவந்தது. அவர்கள் தலையில் எப்படி சுடப்பட்டார்கள் என்று நான் கேட்டேன்? நாட்டில் நிலவிய சாதகமற்ற சூழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்ள முயன்றேன். வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் என் மீது பழி சுமத்தினார்கள்.
நேபாளத்தின் தற்போதைய விளம்பர அரசாங்கம் என்ன நினைக்கிறது? இந்த நாட்டை ஒப்படைத்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுவோம் என்றா? இந்த நாட்டை அரசியலமைப்பு ரீதியானதாகவும், ஜனநாயக ரீதியானதாகவும் மாற்ற வேண்டும், அரசியலை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை கொண்டு வருவோம்” இவ்வாறு கூறினார்.