நேபாளத்தில் இந்திய பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் மரணம்
நேபாளத்தின் டானாஹுன் மாவட்டத்தில் இந்திய பயணியர் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (ஆகஸ்ட் 23) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 பயணிகளுடன் இன்று காலை நேபாளத்தின் பொக்காரா நகரத்திலிருந்து கிளம்பிய இந்திய பயணியர் பேருந்து ஒன்று, அந்நாட்டுத் தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காத்மாண்டுவுக்கு 110 கி.மீ.க்கு முன்பு டானாஹுன் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, மர்ஸ்யாங்டி நதி பாயும் பள்ளத்தாக்குப் பகுதியாகும். பேருந்து விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிகள் நடைபெற்றன. அப்போது பேருந்தில் பயணித்த 14 நபர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த சில நேரத்துக்குள்ளாகவே சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற நேபாள ராணுவம் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவால், 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 2 பயணியர் பேருந்து திரிசூலி நதிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.