
ஹெச்எம்பிவி எனும் வைரஸ் சீனாவில் பெரிதளவில் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டு, ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
சீன சுகாதாரத் துறை அதிகாரிகளின் கருத்துபடி, இந்த வைரஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியுள்ளது. சீனாவின் வடக்குப் பிராந்தியங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்துள்ளது.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்றும் குழந்தைகளில் மத்தியில் பரவலாகப் பாதிப்பை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் அச்சம் எழுந்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்புக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சீன அதிகாரிகளோ அல்லது உலக சுகாதார அமைப்போ வைரஸ் பாதிப்பு குறித்து அவசர நிலையை அறிவிக்கவில்லை.
ஏற்கெனவே இணை நோய் உள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, இருமல், காய்ச்சல் என சாதாரண அறிகுறிகள் தான். கொரோனாவைப் போலவே அருகிலிருக்கும் மனிதர்கள் மூலம் பரவக்கூடிய திறன் கொண்டது இந்த வைரஸ்.
வைரஸ் பரவல் தொடர்பாக ஆசிய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நிலைமையைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.