நேபாளத்தின் இடைக்காலத் தலைவராக சுஷிலா கார்கி தேர்வு! | Nepal |

இளைஞர்களின் பிரதிநிதியாக சுஷிலா கார்கி பேச்சுவார்த்தை நடத்துவார் என இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

நேபாளத்தின் இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை அந்நாட்டு இளைஞர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.

நேபாளத்தில் கடந்த மூன்று நாள்களாக இளைஞர்களின் போராட்டத்தால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல், சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது உள்ளிட்டவை நேபாள இளைஞர்களைக் கொந்தளிக்கச் செய்தது.

இளைஞர்களின் போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த 19 பேர் உயிரிழந்தார்கள். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நீக்கியது.

எனினும், நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜினாமா செய்ய வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தினார்கள். தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றக் கட்டடம், உச்ச நீதிமன்றம், அதிபர் அலுவலகம், அதிபர் இல்லம், பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்.

போராட்டம் தீவிரமானதால், நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள அதிபர் ராமசந்திர பௌடெலும் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. அந்நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர ராணுவம் படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நேபாளத்தின் இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை இளைஞர்கள் தேர்வு செய்துள்ளார்கள். இடைக்கால அரசுக்கு தலைமைப் பொறுப்பேற்பது யார் என்பது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட நேபாள இளைஞர்களிடத்தில் விவாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளைஞர்களின் பிரதிநிதியாக சுஷிலா கார்கி பேச்சுவார்த்தை நடத்துவார் என இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று 2016-ல் வரலாறு படைத்தவர் சுஷிலா கார்கி.

Nepal | Nepal unrest | Nepal Interim Government | Sushila Karki | Interim Leader | Interim Government | Nepal GenZ | Nepal Youths | Nepal Youngsters |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in