

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலுக்கு உடனடியாக பாஸ் பட்டனை அழுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் சூழல் 21 நாள்களைத் தொட்டுள்ளதால் வளைகுடா நாடுகளை எண்ணெய் வளங்களுக்காக நம்பி இருக்கும் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் இருந்து எண்ணெய் போக்குவரத்தை மேற்கொள்ளும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையும் முடக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சீனா கருத்து
இதற்கிடையில், போர் நிறுத்தம் அவசியம் என்பதை சீனா வலியுறுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் உரையாற்றினார்.
கப்பல் போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய கிழக்கில் தற்போதைய மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து விரிவடைந்து வருகிறது. இது முக்கியமான சர்வதேச துறைகளை பாதிக்கிறது. அனைத்து நாடுகளின் பொதுவான நலன்களையும் பாதிக்கிறது. இந்த விளைவுகள் உடனடி போர்க்களத்திற்கு அப்பாற்பட்டவை. இந்த அசாதாரண நிலைமை மத்திய கிழக்கில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்தி, நிதி, வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தையும் நேரடியாக பாதிக்கிறது.
ராணுவ நடவடிக்கைகள் தேவையில்லை
சீனா தனது படைபலத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராணுவ நடவடிக்கைகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ராணுவ வலிமை பிரச்னைகளுக்கு தீர்வல்ல, ஆயுத மோதல் புதிய வெறுப்புகளை மட்டுமே உருவாக்கும் என்பதை வரலாறும் யதார்த்தமும் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளன.
மத்திய கிழக்கில் அமைதி வரும்
சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த பாஸ் பட்டனை அழுத்தி நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டும். சீனா, போர்நிறுத்தம் மற்றும் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். இதன்மூலம் மத்திய கிழக்கில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்ப வரும்” என்றார்.
China urges "pause button" on West Asia conflict, warns of global economic fallout as crisis enters 21st day