
கரூரில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்பெரும் துயரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று தவெக தலைவர் விஜய் காணொளி மூலம் பல்வேறு விளக்கங்களை அளித்ததுடன் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனாவும் தனது இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளது.
சீனா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜியு கியாகுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதலளித்த அவர்,
“இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் எங்கள் இதயம் இரங்கல் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது. எங்களுக்குத் தெரிந்த தகவலின்படி, இதுவரை எந்த சீன உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை”
என்று கூறினார்.