
உலகில் இரண்டாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனா பிறப்பு விகித வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், மூன்று வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு 500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 44 ஆயிரம்) வரை மானியம் வழங்கப்படும் என்று சீன அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தரவுகளின்படி 2100-ம் ஆண்டுக்குள் இன்று 1.4 பில்லியனாக இருக்கும் சீன மக்கள்தொகை 800 மில்லியனாக குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாடு தழுவிய அளவில் வழங்கப்படவுள்ள மானியங்கள் பின் தேதியிட்டு ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என்று சீனா அரசின் அதிகாரபூர்வ ஊடகமான சிசிடிவி, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின் உச்சபட்ச அதிகாரம் பொருத்திய அந்நாட்டு கவுன்சிலின் (State Council) முடிவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
`மக்கள் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட நாடு தழுவிய ஒரு பெரிய கொள்கை இது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு இதன் கீழ் நேரடியாக வழங்கப்படும் பண மானியங்கள், குழந்தைகளை வளர்க்கும் சுமையைக் குறைக்க உதவுகின்றன’ என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இது கடந்த 2016-ல் இருந்ததைவிட எண்ணிக்கையில் பாதியாகும். அதே ஆண்டில் அந்நாட்டில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த `ஒரு குழந்தை கொள்கை’ முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
மேலும், கடந்த 2023-ல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்கிற அந்தஸ்தை சீனா இந்தியாவிடம் இழந்த நிலையில், கடந்தாண்டு அந்நாட்டின் மக்கள்தொகை 1.39 மில்லியன் ஆகக் குறைந்தது.
அந்நாட்டில் திருமண விகிதங்கள் மிகவும் குறைந்துள்ள நிலையில், குழந்தை வளர்ப்புப் செலவுகள் மற்றும் பணி தொடர்பான கவலைகள் காரணமாக பல இளம் தம்பதிகள் குழந்தைகள் பெறுவதைத் தள்ளிப்போடுவதாகக் கூறப்படுகிறது.