

சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணைக் குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்துக் கடுமையாக நடந்து கொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பேமா வாங்கோம் டோங்டொக் என்ற பெண் பிரட்டனில் வசித்து வருகிறார். இவர், கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது விமானம் சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் 3 மணிநேரம் நின்று சென்றுள்ளது. அதற்காக அவர் காத்திருந்தபோது, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி, கடுமையாக நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பேமா தன்னுடைய பாஸ்போர்ட்டில் அருணாச்சல பிரதேசத்தைப் பூர்வீகமாக குறிப்பிட்டிருந்ததால், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, அதனால் பாஸ்போர்ட் செல்லாது என்று சீன அதிகாரிகள் மிரட்டியதாக அவர் கூறியுள்ளார். அவரை 18 மணி நேரம் காக்க வைத்ததால் அவரால் திட்டமிட்டபடி ஜப்பானுக்குச் செல்ல முடியாமல் போனது. இதையடுத்து ஷாங்காய் விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்தது தொடர்பாகவும் சீன அதிகாரிகள் தன்னை நடத்திய விதம் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “காரணமே இல்லாமல் என்னைப் பிடித்து வைத்து, அவர்கள் நடத்திய விதம், இந்திய இறையாண்மையையும், அருணாச்சல பிரதேச மக்களையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சீன அதிகாரிகள் மற்றும் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இந்தியா டுடேவுக்குத் தெரிவித்ததாவது:-
“குடியுரிமை அதிகாரிகளிடம் என்னுடைய பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு, நான் காத்திருந்தேன். அப்போது என்னை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் என் பாஸ்போர்ட் செல்லாது என்றார்கள். நான் அதற்கான காரணத்தைக் கேட்டபோது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்பதால் பாஸ்போர்ட் செல்லாது எனக் கூறினார்.
இதைப் பார்த்து சீன குடியுரிமை அதிகாரிகளுடம், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் கேலி செய்து சிரித்தனர். மேலும், சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர். சீனாவில் 3 மணிநேர காத்திருப்பை 18 மணிநேரமாக ஆக்கி விட்டார்கள். அப்போது எனக்கு உணவுகூட வழங்கப்படவில்லை. ஜப்பான் செல்வதற்கு உரிய விசா இருந்தும், விமானத்தில் ஏறுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. என்னை ஒரு அறையில் சிறைபடுத்தி விட்டார்கள். அதனால் வேறொரு டிக்கெட்டைப் பதிவு செய்யவும் முடியவில்லை. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் மட்டுமே புதிய டிக்கெட் வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். அப்படி செய்தால் மட்டுமே பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்படும் என்று கூறினர். பிறகு, பிரிட்டனில் உள்ள என் நண்பர் ஒருவர் மூலம் சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் வந்து என்னை மீட்டு, விமானத்தில் அனுப்பி வைத்தார்கள்” என்று கூறினார்.
An Indian woman from Arunachal Pradesh has accused Chinese immigration officials at the Shanghai airport of detaining and harassing her for hours after refusing to recognize her Indian passport during a transit halt.