நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் கடந்த 24 மணி நேரத்தில் 112 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 68 நபர்களைக் காணவில்லை எனவும் அந்நாட்டு ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் கடந்த ஒரிரு நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால், அந்நாட்டில் உள்ள ஆறுகள் பலவும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் சுமார் 112 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 68 நபர்களைக் காணவில்லை எனவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
நேற்று (செப்.29) கடந்த 54 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில், அந்நாட்டுத் தலைநகர் காத்மாண்டுவில் சுமார் 323 மி.மீ. கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவமும், காவல்துறையும் மீட்புப் பணிகளில் இறங்கியது.
நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, அந்நாட்டில் மொத்தமுள்ள 77 மாவட்டங்களில், 56 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த வருடம் வடகிழக்குப் பருவமழையால் அந்நாட்டில் சராசரியாக 1,303 மி.மீ. மழை பெய்தது. ஆனால் இந்த வருடம் தற்போது வரை சராசரியாக 1,586.3 மி.மீ மழை பெய்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நேபாளத்தில் ஜூன் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரும். ஆனால் இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.