மாஞ்சோலையை தொழிலாளர்களை வெறுங்கையுடன் விரட்டியடிப்பதை ஏற்க முடியாது: திருமாவளவன்
PRINE-127

மாஞ்சோலையை தொழிலாளர்களை வெறுங்கையுடன் விரட்டியடிப்பதை ஏற்க முடியாது: திருமாவளவன்

தமிழ்நாடு அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த முன்வருவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்
Published on

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

`மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அதற்குரிய அழுத்தங்களை அந்த (தனியார்) நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும். அம்மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஒரு கொள்கை முடிவை எடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்’ என்று பேசினார் திருமுருகன் காந்தி.

இது குறித்து மேலும் பேசிய காந்தி, `இந்த மக்கள் வெள்ளையர்கள் காலத்தில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் பணியமர்த்தப்பட்டனர். பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் அரை அடிமை முறையில் இருந்தனர். நான்கு தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். சுதந்திரத்துக்குப் பிறகும் அவர்களின் நிலையை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

தொழிலாளர்களை வெளியேற்ற தனியார் தேயிலை நிறுவனம் முயன்றதை உயர் நீதிமன்றம் தடுத்திருக்கிறது. தனியார் தேயிலை நிறுவனம் தொழிலாளர்களுக்கு தகுந்த ஒரு இழப்பீடு வழங்கவில்லை. இது அடிப்படையில் ஒரு குற்றச்செயல். தொழிலாளர்களுக்கான தகுந்த இழப்பீட்டை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், `பாதிக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு அரசை அனைவரும் வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்த முன்வருவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.

மாஞ்சோலையை செம்மைப்படுத்திய தொழிலாளர்களை வெறுங்கையுடன் விரட்டியடிப்பது ஏற்புடையது அல்ல. இது மாபெரும் சுரண்டல். தமிழ்நாடு அரசு இதில் தீவிரமாக தலையிட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை கணிவுடன் பரிசீலிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in