துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களிடம் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"திமுக - விசிக ஆகிய இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கான வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தைப் பலரும் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டார்கள். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்துவிட்டது. அதனால் திமுக - விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கும் வாய்ப்பு இல்லை" என்றார்.
இதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா கூறியது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு, "கட்சியிலுள்ள முன்னணி தோழர்களோடு உள்கட்சி விவகாரங்களைக் கலந்து பேசிதான் எந்த முடிவும் எடுப்போம். முன்னணி பொறுப்பாளர்களான பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள் என உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாகப் பேசியிருக்கிறேன். மீண்டும் கலந்துபேசி இதுதொடர்பான முடிவை எடுப்போம்" என்றார் திருமாவளவன்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் ஊடகங்களில் அளித்து வரும் நேர்காணல் திமுக கூட்டணியில் சர்ச்சையாக வெடித்துள்ளன. திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகாலம் அனுபவம் கொண்ட எங்களுடையத் தலைவர் துணை முதல்வர் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புவதில் தவறில்லையே எனப் பேசியிருந்தார். வடமாநிலங்களில் திமுகவின் வெற்றிக்கு விசிகவின் வாக்குகள் காரணம் என்ற வகையில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு ரவிக்குமார், வன்னி அரசு உள்ளிட்டோர் முரண்பட்டிருந்தார்கள்.