காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: அண்ணாமலை கேள்வி

பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களில், முழு விவரம் தெரியும் முன்பே கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இந்த சம்பவத்தில் மௌனமாக இருக்கிறார்?
காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?: அண்ணாமலை கேள்வி
1 min read

மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்ய காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அவர் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`சென்னை அயனாவரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை ஏழு பேர் கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து மாணவியின் தந்தை, அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவியின் உறவினர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப்பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற 5 பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். பாலியல் வன்கொடுமை குறித்த புகாருக்கு வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு யார் கொடுத்தது?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள் குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?

நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச்செயல்களின் முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலவர் ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? தன் பொறுப்பில் இருக்கும் காவல்துறையை அவர் எவ்வாறு கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக இது குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in