இரு அட்மின்கள் உள்ளதால் ஏற்பட்ட குழப்பம் என வீடியோ சர்ச்சை குறித்து திருமாவளவன் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று காலை தான் பேசிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். இதில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை முன்வைத்து திருமாவளவன் பேசியிருந்தார். இந்தக் கருத்துடன் கடைசி மக்களுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற முழக்கத்தையும் தான் முன்வைத்ததாக திருமாவளவன் வீடியோவில் பேசியிருந்தார். அதேவேளையில், இந்த முழக்கத்தை எழுப்பக்கூடிய துணிச்சல் விடுதலைச் சிறுத்தைக்கு மட்டுமே இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நேரத்தில் இந்த வீடியோவை பதிவேற்றியது சர்ச்சையானது. பிறகு இந்த வீடியோ நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் அட்மின் பதிவிட்டிருப்பார் என்று கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் விரிவான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"நாங்கள் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து முன்வைத்து வரும் கருத்துதான் அது. புதிதாகப் பேசவில்லை. 1999-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மூப்பனாரோடு இணைந்து தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது நாங்கள் வைத்த முழக்கம் கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதாகும். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை திருமாவளவன் வைக்கிறார், அவரை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன் என மூப்பனார் அனைத்து மேடைகளிலும் 1999-ல் பேசியிருக்கிறார். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டிலே நேற்று பேசினேன்.
இந்தப் பேச்சை எடுத்து என்னுடைய நிர்வாகக் குழுவைச் சார்ந்தவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள். இதை ஏன் திரும்ப எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் அவர்களைத் தொடர்புகொண்டு பேசவில்லை.
நான் தில்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தேன். மதுரையில் இறங்கியவுடன்தான் என்னிடம் கூறினார்கள். இனிதான் அவர்களைத் தொடர்புகொண்டு பேச வேண்டும் . இது புதிய கோரிக்கை அல்ல. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய ஒன்றுதான். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், எளிய மக்களிடம் அதிகாரம் வந்தால் தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும் என்பதை 1999-ல் அடியெடுத்து வைத்தபோது நெய்வேலியில் வைத்த முழக்கம் இது.
நாங்கள் மூப்பனாருடன் முதன்முறையாகக் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் மதுரையில்தான் நடைபெற்றது. நெய்வேலியில் நான் பேசியதைக் கேட்டுவிட்டு மூப்பனார் மேடையிலேயே பேசினார். திருமாவளவன் இதுபோன்ற ஜனநாயகப்பூர்வ முழக்கத்தை வைத்திருக்கிறார். மிகவும் ஜனநாயகப்பூர்வ முழக்கம் அது. இதில் நான் முழுமையாக உடன்படுகிறேன் என்றார். அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற அவருடையக் கோரிக்கையை நான் வரவேற்கிறேன் என்று பேசினார்.
நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இதை நினைவுபடுத்தி மேற்கோள் காட்டி பேசினேன். இந்த உரையைதான் பதிவிட்டிருக்கிறார்கள். ஏன் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை.
தற்போது ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி நடைபெறவில்லை. ஜனநாயகப் பரவலாக்கத்தில் அதிகாரப் பரவலாக்கம் என்பது மிக முக்கியமானது. இதை எப்போது வேண்டுமானாலும் பேசலாம், கேட்கலாம்.
தற்போது தேர்தல் நேரம் கிடையாது. அதிகாரத்தில் பங்கு என்று கேட்டிருந்தால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நான் கேட்டிருக்க வேண்டும். அல்ல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தான் கேட்க முடியும். என் உரையை எடுத்து தலைப்பு வைத்து பதிவிட்டிருக்கிறார்கள், என்ன காரணத்துக்காக எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
திமுக கூட்டணியை முறித்துக்கொள்வதாக விசிக எந்த இடத்திலும் பேசவில்லை. நாங்கள் மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை அக்டோபர் 2-ல் நடத்துகிறோம். செய்தியாளர்கள் சந்திப்பில் என் கருத்தை ஒட்டி கேள்வியெழுப்பினார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளுக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு உள்ளது. திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக என அனைவரும் மது விலக்கைப் பேசுகிறோம். இப்படி இருந்தும் மதுக்கடைகளை மூட என்ன தயக்கம் என்று கேட்டேன்.
இதற்குப் பத்திரிகையாளர்கள் சில மாதிரியாகப் பல கேள்விகளைக் கேட்டார்கள். இதற்கு தன் இயல்பாகப் பதிலளித்தேன். யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம், அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுகிறேன். அதிமுகவும் கூட பங்கேற்கலாம். அவர்களுக்கும் இதில் உடன்பாடு உள்ளது.
இதைக் கூறும்போதே தேர்தலுடன் இதை முடிச்சு போடக் கூடாது, இது மக்கள் பிரச்னை என்றேன். காவிரி நீர்ப் பிரச்னை, ஈழத் தமிழர் பிரச்னைகளில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுவதைப் போல பாஜக உள்பட அனைவரும் மது ஒழிப்பிலும் ஒன்று சேர வேண்டும் என்றேன்.
இதில் பாஜகவுடன் இணைவதில் எங்களுக்கு நெருடல் உள்ளது. பாமகவும் மது ஒழிப்பை பேசக்கூடிய கட்சிதான். ஆனால், விசிக - பாமக இடையே கடந்த காலங்களில் நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளன. இதனால்தான் சாதிய, மதவாத சக்திகளோடு எந்தக் காலத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று கூறினேன். மற்றக் கட்சிகள் யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதொடர்புடையக் கேள்விக்குப் பதிலளித்தேன், இதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம், தொடர்கிறோம். இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.
நான் பேசியது பழைய வீடியோ கிடையாது. புதிய வீடியோதான். பழைய செய்தியைக் குறிப்பிட்டு பேசினேன். இரு அட்மின் உள்ளார்கள், அவர்களுக்கிடையே என்ன சிக்கல் என்று தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பம்தான் இது. மற்றபடி ஒன்றும் கிடையாது.
மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கிற யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று அங்கே கூறினேன். அதை மீண்டும் வழிமொழிகிறேன். யார் யாரை அழைப்பது என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. யாருக்கும் நாங்கள் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை. இருப்பது இன்னும் 15 நாள்கள் தான். உயர்நிலைக் குழுவில் யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்யவுள்ளோம். இது மகளிர் மாநாடு என்பதால் தேசிய அளவில் மகளிரணித் தலைவர்களை அழைக்கதான் முடிவு செய்துள்ளோம்" என்றார் திருமாவளவன்.