
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அண்மையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்றார். இந்நிலையில், இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக்கணக்கில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது,
`தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்று கூறுகிறார். இது தொடர்பாக எங்களுக்கு சில கேள்விகள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதான் அந்த ராஜதந்திரமா? பலநூறு மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் உங்கள் ராஜதந்திரமா? மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இதுவும் ராஜதந்திரத்தில் அடங்குமா?
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, அதற்கு முழு சம்மதம் தெரிவித்து தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றி திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏன் பேசியதில்லை? தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்?’ என்றார்.