
விஜயை மட்டும் குற்றவாளி ஆக்க முடியாது, முதல்வர் தொடர்ந்து ஆளுநரைச் சீண்டுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“கரூர் விவகாரத்தில் நீதிபதிகளைப் பற்றி நாங்கள் எப்போதும் குறை கூறுவதில்லை. நீதிபதிகள் எல்லாவற்றையும் தாண்டி உயர்ந்தவர்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளின் கடுமையான தன்மை வாய்ந்தவை. ஒரு நீதிபதியாக இருந்தாலும், வார்த்தைகளின் தன்மை முக்கியம். ஆனால், இன்று அது சமூக வலைதளங்களில் பேசப்படும் பொருளாக இருக்கிறது. நீதிபதியின் குடும்பத்தையே இதில் இழுத்திருக்கிறார்கள். அவரது தாயார் முன்பு திமுக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்திருக்கிறார். இன்று அவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், யார் தவறு என்றே தெரியாமல், விசாரணை முடியும் முன்பே நீதிபதி கருத்து சொல்வது சரியாக இருக்குமா என்பது எனது தனிப்பட்ட கேள்வி. இது பாஜகவின் கருத்து அல்ல.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடக்கிறது. இந்தியாவில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசை அருகில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் மத்திய அரசை எதிரியாகக் கருதி, முதல்வர் பேசி வருகிறார். ராமநாதபுரத்தில் மீனவ நண்பர்களைச் சந்திக்கும்போது, தங்கள் தவறை மறைக்க கச்சத்தீவு பற்றி பேசுகிறார். ஆரோக்கியமாக எந்த விஷயத்தையும் பேசாமல், எல்லாவற்றையும் மத்திய அரசு மீது தூண்டிவிடுகிறார். ஆளுநர் கேட்கும் கேள்விகள் சரியானவை. தமிழ்நாடு யாருக்கு எதிராகப் போராடுகிறது? இவர்கள் ஆளுநரை மாற்ற முடியுமா? ஆளுநர் பதவியே இல்லாமல் செய்ய முடியுமா? முடியாது. எனவே, திமுக மக்களை வேண்டுமென்றே தூண்டி, தேவையில்லாமல் போராட்ட மனநிலையை உருவாக்குகிறது. இது ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலை இல்லை. ஆளும் கட்சி எல்லாவற்றையும் அனுசரித்து செல்ல வேண்டும். ஆளுநர் அதன் அடிப்படையில்தான் கேள்வி கேட்கிறார். முதலமைச்சர் தொடர்ந்து ஆளுநரை சீண்டுவது நாட்டுக்கு நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்பது எங்கள் கருத்து.
கரூர் விவகாரத்தில், விஜய் மீது வழக்கு போட்டு முதல் குற்றவாளியாக்கினால், அது சட்டப்படி நிற்காது. சட்டம் தெரிந்தவர்கள் இதைச் சொல்வார்கள். அவர்களைக் கைது செய்ய முடியாது. ஹைதராபாத் அல்லு அர்ஜுனா விவகாரத்திலும் இதே தான் நடந்தது. அரசியல் ஆசைக்காக ஒரு இரவு சிறையில் வைக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள். இது குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்கு சமம். அரசு உறுதியாக இருந்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் முதல், தமிழக வெற்றி கழகத்தின் அடிமட்ட நிர்வாகிகள், அனுமதி வாங்கியவர்கள் மீது தவறு இருக்கிறதா? அனுமதி கொடுத்த அதிகாரிகள் சரியாக செயல்பட்டார்களா? தவெக மீதும் தவறுகள் உள்ளன. சில விஷயங்களை சரியாக செய்திருக்க வேண்டும். ஆனால், விஜயை மட்டும் குற்றவாளியாக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.
தவெகவையோ விஜயையோ பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை. நியாயமாக பேசுகிறோம். தமிழ்நாட்டில் எந்த கட்சியையும் ஆளும் கட்சி நசுக்கினால், நாங்கள் கருத்து சொல்வோம். தமிழக வெற்றி கழகத்தை இந்த விவகாரத்தில் நசுக்க முயல்கிறார்கள். தலைவர்களை நசுக்க முயல்கிறார்கள். நாங்கள் கருத்து சொல்கிறோம். ஆனால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவோ, ஆதரவு தருவதாகவோ இல்லை.
என் பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்த விவகாரத்தில் காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன். காவல்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினேன். ஆழமாக விசாரிக்க வேண்டும், யாராக இருந்தாலும் விடக்கூடாது, நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். பணம் பெற்றவர்களையோ, பாதிக்கப்பட்டவரையோ நான் பார்த்ததில்லை. பாதிக்கப்பட்டவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.