திமுக கூட்டணி: விசிகவுக்கு மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள்!

"விழுப்புரம், சிதம்பரம் என இரு தனித் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) இரு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக - விசிக இடையிலான மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதியாகாமல் இருந்தது. திமுக - மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடும் இறுதியாகாமல் இருந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அண்ணா அறிவாலயம் சென்றார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் வைகோ இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளன் அண்ணா அறிவாலயம் சென்றார். முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு திமுக, விசிக இடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:

"மக்களவைத் தேர்தலில் திமுகவும், விசிகவும், மற்ற தோழமைக் கட்சிகளும் போட்டியிடுவது தொடர்பாக இன்று திமுகவும், விசிகவும் கலந்து பேசியதில், திமுக கூட்டணியில் விசிக 2 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவானது. விழுப்புரம், சிதம்பரம் என இரு தனித் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. இந்த ஒப்பந்தம் சற்று முன் கையெழுத்தானது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ, இந்தத் தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியின் உடன்பாட்டோடு அதே பகிர்வு முறையில் தொகுதிப் பங்கீடு நடைபெற்றது. விசிக 3 தனித் தொகுதிகள், 1 பொதுத் தொகுதி வேண்டும் என முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கேட்டோம். பிறகு, 2 தனித் தொகுதிகள், 1 பொதுத் தொகுதி எனக் கேட்டோம்

கடந்த தேர்தலில் இந்தக் கூட்டணி எந்தளவுக்குக் கட்டுக்கோப்பாக இருந்ததோ, அதே கட்டுக்கோப்புடன் இந்த முறையும் இருக்க வேண்டும் என்பதற்காக, இரு தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளோம். விசிகவைப் பொறுத்தவரை தனிச் சின்னத்தில், பானை சின்னத்தில் போட்டியிடுவது என ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறோம்" என்றார் அவர்.

திமுக கூட்டணி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2

இந்திய கம்யூனிஸ்ட் - 2

விடுதலைச் சிறுத்தைகள் -2

மதிமுக - 1

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in