யுஜிசி புதிய வரைவு விதிகள் என்பது சனாதன அரசியல் சதி: திருமாவளவன்

பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு ஒரு கோடிக்கும் மேல் குறைந்துள்ளது.
யுஜிசி புதிய வரைவு விதிகள் என்பது சனாதன அரசியல் சதி: திருமாவளவன்
2 min read

யுஜிசி புதிய வரைவு விதிகள், உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கிற சனாதனப் போர் என்று கருத்து தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவிலும், துணைவேந்தர் நியமனங்களிலும் மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சமீபத்தில் யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம், பட்டப் படிப்புகள் குறித்து வெளியிட்டுள்ள விதிகள் மாநில உரிமைகளைப் பறிப்பவையாகவும் மனுவின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகவும் உள்ளன. இவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இந்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முழுமையாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன; துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்துக்கான தகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொதுப்பட்டியலில் உள்ள கல்வி குறித்து மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்திருப்பது இந்திய அரசிலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

மாநிலப் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனி சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தச் சட்டங்களுக்குப் புறம்பாக இந்த விதிகள் உள்ளன. துணைவேந்தர்கள், பேராசிரியர்களை நியமனம் செய்வதற்குத் தற்போதுள்ள கல்வித் தகுதிகளைத் தளர்த்தியதன் மூலம், முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களையும் நியமனம் செய்வதற்கு புதிய விதிகள் வழிவகுக்கின்றன.

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது. ஏற்கனவே `லேட்டரல் என்ட்ரி’ என்ற பெயரில் மத்திய அரசில் அதிகாரம் மிக்க செயலாளர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பின்வாசல் வழியாக பாஜக அரசு நியமனம் செய்தது. தற்போது உயர்கல்வியை முழுமையாக சனாதனமயமாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.

பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு ஒரு கோடிக்கும் மேல் குறைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த நோக்கமே பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களைக் கல்வி கற்க விடாமல் தடுத்து அவர்களைப் படிப்பறிவில்லாதவர்களாக ஆக்குவதுதான்.

தற்போது உயர்கல்வியிலிருந்து பெரும்பான்மை மக்களை வெளியேற்றுவதற்கு பாஜக அரசு இந்த விதிகளைக் கொண்டு வருகிறது. பட்டப்படிப்பில் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் படிப்பை நிறுத்தி வெளியேறலாம் அதற்கேற்ப சான்றிதழ்கள் அளிக்கப்படும் என்கிற தேசிய கல்விக் கொள்கையின் ஏற்பாடு. பெரும்பான்மை மக்களைப் பட்டப்படிப்பு படிக்க விடாமல் முறை சார்ந்த கல்வியில் இருந்து அவர்களை வெளியே அனுப்புவதற்கான சதித்திட்டம் ஆகும்.

ஏற்கனவே பள்ளிக் கல்விக்காக தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இப்போது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளை செல்லாமல் ஆக்குவதற்குத் திட்டம் தீட்டப்படுகிறது. மத்திய பாஜக அரசின் இந்த புதிய விதிகளால் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களின் பட்டங்கள் மதிப்பை இழக்க நேரிடும்.

இது உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கிற சனாதனப் போராகும். மத்திய பாஜக அரசு வெளியிட்டிருக்கும் வெகுமக்களுக்கு விரோதமான பல்கலைக்கழக மான்யக்குழுவின் புதிய விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in