
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்திற்கு 1200 மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
கடந்த 2019-ல் சண்டிகர் அரசு மருத்துவக் கல்லூரியில், வசிப்பிடம் அடிப்படையில் வழங்கப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது.
`இந்தியாவில் ஒரு குடிமகனாக எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும், கல்வி கற்கவும் உரிமை உள்ளது. இளநிலை படிப்பில் குறிப்பிட்ட அளவில் அந்த மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம். ஆனால் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிடத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவ இடங்களை நீட் தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில் நிரப்பவேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜன.30) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது,
`வசிப்பிட அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல் நேற்று (ஜன.29) கிடைத்தது. இதனால் 1200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளோம்.
தமிழகத்தின் உரிமைகள் பாதிப்படையக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். குறிப்பாக முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு இந்த தீர்ப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
மாநிலங்களுக்கு இடையே மாநில அளவில் வழங்கப்படும் இடஒதுக்கீடு நடைமுறையில் வேறுபாடுகள் உள்ளன. நமக்கு சாதகமாக உள்ளது அவர்களுக்கு பாதகமாகவும், அவர்களுக்கு பாதகமாக உள்ளது நமக்கு சாதமாகவும் தெரியும். எனவே காலம் காலமாக நமக்குக் கிடைத்துவரும் உரிமைகள் பறிபோகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இந்த தீர்ப்பால் அரசு மருத்துவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் கிடைக்கும் உரிமைகள் முழுமையாக பாதிக்கப்படும். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தும்
நம்மிடம் 2500-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இவற்றை பறித்து பிறருக்கு வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகவே இதைப் பார்க்கவேண்டியுள்ளது.’ என்றார்.