
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநருக்கு எதிராக உப்பு சப்பில்லாத போராட்டத்தைத் திமுக நடத்தியதாகக் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
48-வது சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்ற அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,
`சென்ற முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எப்படி நடந்ததோ, அதுபோல இல்லாமல் (இந்த முறை) நேர்மையாக நடத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். மக்களைப் பட்டியில் அடைத்து வைத்துப் பணம், பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. இந்த முறை ஈரோடு கிழக்கு தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
உப்புச் சப்பு இல்லாத காரணத்திற்காக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. மாநில அரசும், ஆளுநரும் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிக்கலாம். கடந்த ஆண்டு இதே பிரச்னைக்கு ஆர்ப்பாட்டம் நடத்தாத திமுக இந்த ஆண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால், அண்ணா பல்கலைகழக பாலியல் வன்கொடுமை பிரச்னையை அவர்கள் திசை திருப்ப நினைக்கின்றனர்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி தமிழகத்தில் இருப்பதாகக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கூறுகின்றனர். ஆளுநரை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் திமுகவினரால் ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. காவல்துறை கையைக் கட்டிக்கொண்டு இதை வேடிக்கை பார்க்கிறது. இது தவறில்லையா? இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்போவதில்லை என மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. மதுரைக்குச் சென்று, இங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது என அங்குள்ள விவசாயிகளிடம் கூறுவதில் முதல்வருக்கு என்ன பிரச்னை? இதற்கு முதல்வர் சென்றிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு உப்பு சப்பில்லாத காரணத்திற்கு ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடைபெறுகிறது.
பிறந்தநாளுக்குப் போஸ்டர் அடித்தபிறகு கனிமொழிக்குப் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. எனவே இந்தப் போராட்டத்தில் ஏதாவது பேசினால்தான் கனிமொழியால் தப்பிக்கமுடியும். அனைவரும் ஆளுநரைப் பயன்படுத்தி அவர்களின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர். ஆளுநர் பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.
கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளானதால் கம்யூனிஸக் கொள்கை நீர்த்துப் போய்விட்டதாக ஆ. ராசா கூறியிருக்கிறார். எனவே கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருந்து வெளியேவர வேண்டும். கொடுப்பதைக் கொடுத்தால் வாங்குவதை வாங்கிக்கொண்டு எங்களுடன் இருப்பார்கள் என சேகர்பாபு கூறுகிறார். மூன்றரை ஆண்டுகளாக திமுக கூறுவதற்குச் சாமரம் வீசி கம்யூனிஸ்ட் கட்சி நீர்த்துப்போய்விட்டது’ என்றார்.