
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவிடாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகையை, கோயில் அதிகாரிகள் தடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
4 ஆண்டுகளாக நடைபெற்ற கோயில் புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து, ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று (ஜூலை 7) நடைபெற்றது. தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விழாவில், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
பிரதான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும் நிகழ்விற்காக தமிழிசை சௌந்தரராஜனை அழைத்துச் சென்றபோது, செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு அவரது ஆதரவாளர்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கோபுரத்திற்குச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கலசத்தில் புனித நீர் ஊற்றும் சடங்கில் பங்கேற்கவிடாமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் அவர் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மரியாதை அடிப்படையில் வழங்கப்படும் கோயில் கொடியும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை பேசியதாவது,
`அதிகாரிகள் மெத்தப்போக்கைக் கடைபிடித்தனர். 2000 ஆண்டுகால பிரச்னையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது. மக்களோடு மக்களாக நின்று நாங்கள் பார்த்துவிட்டு வந்தோம். நாங்கள் ஏதாவது கூறி, முதல்வரின் நற்பெயருக்கோ அறநிலையத்துறை அமைச்சருக்கோ எந்தவிதமான களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதால் பக்தர்களோடு பக்தர்களாக நின்றேன்.
அதிகாரிகள் தங்களை அதிகாரிகளாக நினைக்கவேண்டும். அதிகாரிகள் அதிகாரிகளாக இருக்கவேண்டும். பிரச்னையே அதுதான்’ என்றார்.