இன்று (செப்.29) தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கோவி. செழியனுக்கு, உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த சி.வி. கணேசன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி. செழியன் இன்று தமிழக அமைச்சராகப் பொறுபேற்றுக்கொண்டார்.
இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் பட்டியலின சமூகத்தினவரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவி. செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியவை பின்வருமாறு:
`தமிழக அரசியலில் இது முதல்முறையாக நிகழ்ந்த ஒன்று என பலரும் வியப்புடன் பாராட்டுகின்றனர். நீண்ட காலமாக இந்தக் குறை பட்டியல் சமூகத்துக்கு உண்டு. மக்கள் தொகை மிக கணிசமான அளவில் உள்ள ஒரு சமூகப் பிரிவினர் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லையே என்கிற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் உயர் கல்வித்துறையை ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த உறுப்பினருக்கு வழங்கியிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் இதனை வரவேற்றுப் பாராட்டுகின்றனர். கூட்டணிக் கட்சி என்ற முறையில் விசிகவும் இதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்’ என்றார்.