
டாஸ்மாக் தலைமையகத்தில் பாஜக அறிவித்திருந்த முற்றுகைப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக, மார்ச் 17 அன்று சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதன்படி, சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த பாஜக இன்று திட்டமிட்டது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்கள்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "சட்டம் ஒழுங்கு என்கிற அடிப்படையில் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். பாஜகவின் போராட்டத்தை வரவேற்கிறோம். மதுபானம் முற்றாகத் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்காகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் அரசியல் காரணமாக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற உத்தியாக இதைக் கையாள்வார்கள் எனில், அதை அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்புக் கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் பாஜக மது ஒழிப்பை முன்னிறுத்தினால், அதை நாம் முழு மனதோடு வரவேற்கலாம், பாராட்டலாம்.
நாங்கள் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், தோழமைக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி மது ஒழிப்புக் கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்றார் திருமாவளவன்.