
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து வழங்கினார்.
திமுக மற்றும் திமுக கூட்டணி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இடைநீக்கத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன் இடையிலான இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:
"விசிக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நால்வரும் தங்களுடைய ஊதியத்தை வழங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இருமாத ஊதியத்தை வழங்கியிருக்கிறோம். இதன் அடிப்படையில் ரூ. 10 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு காசோலையாக முதல்வரிடத்தில் வழங்கியுள்ளோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அண்மைக் காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடையக் கருத்துகளைப் பதிவிட்டதன் மூலம், கட்சியின் நன்மதிப்புக்கும் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது.
அதுகுறித்து அவரிடத்தில் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் செய்தோம். ஆனாலும் கூட அவருடைய அண்மை நிகழ்வின் பேச்சு கட்சியின் நன்மதிப்புக்கும் தலைமையின் நம்பகத்தன்மைக்கும் எதிராக அமைந்துள்ள சூழலில்தான் கட்சியின் முன்னணி தலைவர்கள், தலைமை நிர்வாகத்தைச் சார்ந்தவர்களோடு ஆலோசனை செய்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்துள்ளோம்.
ஆதவ் அர்ஜுனா இனி தான் விளக்கம் கொடுப்பார். 6 மாத காலம் இடைநீக்கம் செய்துள்ளோம். விளக்கம் கொடுப்பதற்காக அவருக்கு இடம் கொடுக்கப்படுகிறது.
அவருக்குப் பலமுறை வாய்வழியாக சில வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம். அதை மீறி நடந்ததற்காக, ஓர் அவசரத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
திமுக தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் நெருக்கடியும் எனக்கு இல்லை. அதைப் பற்றி அவர்கள் யாரும் பேசவும் இல்லை.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க இயலாது என்று எடுத்த முடிவு சுதந்திரமாக எடுத்த முடிவு.
விசிக, தமிழக வெற்றிக் கழகம் இடையே எந்த மோதலும் இல்லை. விஜயுடன் எங்களுக்கு எந்த சர்ச்சையோ சிக்கலோ இல்லை. ஆனால், அவருடன் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது, எங்களுடையக் கொள்கைப் பகைவர்கள் எமது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று கருதக்கூடியவர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கதை கட்டுவதற்கு, திரிபுவாதம் செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை முன்உணர்ந்து எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு.
விகடன் பதிப்பகத்தாருக்கு மிகவும் தொடக்கத்திலேயே நாங்கள் சுட்டிக்காட்டிவிட்டோம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, அவரோடு நிற்பதை நாங்கள் வேறெந்தக் கோணத்திலும் தவறாக அணுகவில்லை. எனவே நீங்கள் அவரை வைத்து புத்தகத்தை வெளியிடலாம் என முன்கூட்டியே நாங்கள் அறிவித்துவிட்டோம். ஆனால் அதைத் தொடர்ந்து ஒரு சர்ச்சையாக ஒரு பேசுபொருளாக சிலர் திட்டமிட்டு மாற்றினார்கள். நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவும் அந்த விழாவில் பங்கேற்பதற்கு முன்பு என்னிடத்தில் பேசினார்.
அந்த நூலை உருவாக்கியதில் உங்களுக்குப் பங்கு இருக்கிறது. ஆகவே, நீங்கள் இந்த விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி உங்களைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகம் இல்லை. ஆகவே, நீங்கள் சுதந்திரமாக அந்த நிகழ்வில் பங்கேற்கலாம். எனக்கு எந்த நெருடலும் இல்லை என அவரிடம் சொன்னேன்.
அதேவேளையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம். புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி பேசுங்கள் அல்லது நூல் உருவாக்கத்தின் பின்னணி குறித்து பேசுங்கள் என கட்சியைச் சார்ந்த முக்கியப் பொறுப்பாளர் என்ற அடிப்படையில் சில வழிகாட்டுதல்களைத் தந்தேன்.
அதையும் மீறி அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விடுதலைச் சிறுத்தைகள் மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்துவிட்டது. ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு தேவை எழுந்ததன் அடிப்படையில் பொதுச்செயலாளர்கள் உள்பட முன்னணி தோழர்களோடு கலந்துபேசி, முழுமையாக அனைவரின் ஒப்புதலோடும் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
பாஜக, அதானி கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது மோடி கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை அண்ணாமலை முதலில் கூறட்டும். இதன்பிறகு, நான் விசிக யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறேன்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு என் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அவர் நம்பிக்கையில்லாமல் பேசுகிறார் என்று சொல்லவில்லை. எனக்கென்று ஒரு நம்பகத்தன்மை உள்ளது. எங்கள் கட்சித் தோழர்கள் என் மீது ஒரு நம்பிக்கையோடுதான் உள்ளார்கள். அவர் தலைமையை மீறி பேசுகிறாரா, தலைவர் அவர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறாரா என்கிற ஓர் எண்ணம் உருவாகிறது. இதுபோன்ற நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தான் சுட்டிக்காட்டுகிறேன்.
முதல்வரிடம் இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. காசோலையை அவரிடம் கொடுத்தோம். உடனடியாக, கலைஞர் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா, சட்டப்பேரவைத் தலைவர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அன்போடு அழைத்தார். அதில் நாங்கள் கலந்துகொண்டோம்" என்றார் திருமாவளவன்.