ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்துப் பேசிய விடியோவை எக்ஸ் தளத்தில் அட்மின் பதிவிட்டு நீக்கியிருக்கக்கூடும் என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று காலை தான் பேசிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். இதில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை முன்வைத்து திருமாவளவன் பேசியிருந்தார். இந்தக் கருத்துடன் கடைசி மக்களுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற முழக்கத்தையும் தான் முன்வைத்ததாக திருமாவளவன் வீடியோவில் பேசியிருந்தார். அதேவேளையில், இந்த முழக்கத்தை எழுப்பக்கூடிய துணிச்சல் விடுதலைச் சிறுத்தைக்கு மட்டுமே இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் பேசினார்.
தான் பேசிய இந்த வீடியோவை திருமாவளவன் சிறிது நேரத்தில் நீக்கினார். இருந்தபோதிலும், திருமாவளவனின் இந்தப் பதிவு அரசியலில் சூழலில் பேசுபொருளானது.
ஏற்கெனவே மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்தது பேசுபொருளானது. பிறகு, இதைத் தேர்தல் கூட்டணியோடு இணைத்துப் பார்க்கக் கூடாது என்று திருமாவளவன் விளக்கமளித்தார். இது அவருடைய விருப்பம் என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திருமாவளவன் கூறிய விளக்கத்துக்குப் பிறகு தான் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். இத்துடன் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக எண்ணப்பட்ட நிலையில், திருமாவளவனின் புதிய வீடியோ பதிவு சர்ச்சையானது. இந்தக் காட்சிகள் கூட்டணியில் விரிசல் ஏற்படுவதை உணர்த்துவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதினார்கள்.
இந்த நிலையில், வீடியோவை அட்மின் பதிவேற்றியிருக்கக் கூடும் என திருமாவளவன் மதுரையில் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்கள் கேள்வி: அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தீர்கள். அந்த வீடியோவை நீக்கியுள்ளீர்கள். என்ன காரணம்?
திருமாவளவன் பதில்: அது யாராவது அட்மின் செய்திருப்பார்கள். எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.
செய்தியாளர்கள் கேள்வி: இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா, அந்தக் காட்சியை அப்படியே வைத்திருக்க விரும்புகிறீர்களா? உங்களைக் கேட்காமல் அட்மின் நீக்கியிருக்கிறா?
திருமாவளவன் பதில்: எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை, இனிதான் பார்க்க வேண்டும்.
செய்தியாளர்கள் கேள்வி: அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டை மாற்றுகிறீர்களா?
திருமாவளவன் பதில்: இது நாங்கள் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருக்கிற விஷயம்தான்.
செய்தியாளர்கள் கேள்வி: பிறகு ஏன் அந்தப் பதிவை நீக்கினீர்கள்?
திருமாவளவன் பதில்: எனக்குத் தெரியவில்லை. அட்மினிடம் கேட்க வேண்டும்.
செய்தியாளர்கள் கேள்வி: நீக்கியதில் உடன்பாடு இல்லையா?
திருமாவளவன் பதில்: எனக்குத் தெரியவில்லை, நான் பார்த்துவிட்டுதான் சொல்ல முடியும்.
செய்தியாளர்கள் கேள்வி: அட்மின்தான் பதிவிட்டார் என்றால் அவரிடம் இதுகுறித்து ஏதேனும் கேட்டீர்களா?
திருமாவளவன் பதில்: அட்மினிடம் கேட்கவில்லை, தற்போதுதான் இதைப் பார்த்தேன்.