விடுதலைச் சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு தவெக தலைவர் விஜயும் வரலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ல் விடுதலைச் சிறுத்தைகளின் மகளிரணி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு குறித்து கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என அவர் அழைப்பு விடுத்தார்.
"இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம். அதிமுகவும் பங்கேற்கலாம், எந்த கட்சியும் பங்கேற்கலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.
இதைத் தேர்தலுடன் தொடர்புபடுத்த வேண்டாம். தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு. மக்கள் பிரச்னைகளுக்காக மதவாத, சாதிய சக்திகளைத் தவிர வேறு எந்த ஒரு ஜனநாயக சக்திகளோடும் நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டிய தேவை உள்ளது" என்றார் திருமாவளவன்.
இது அரசியல் சூழலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருமாவளவனின் அழைப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கட்சித் தலைமைதான் இதுகுறித்து முடிவெடுக்கும் என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுதொடர்பாகக் கேட்கப்பட்டது. இதற்கு, அவர்களுடைய (விசிக) விருப்பம் என்று கூறி கடந்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தவெக தலைவர் விஜய்-க்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
"நல்ல கேள்வி. இந்தக் கேள்வியை நேற்று யாரும் கேட்கவில்லை. இன்று கேட்கிறீர்கள். விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடும் இருக்கும். கட்டாயமாக அவரும் வரலாம்" என்று பதிலளித்தார் திருமாவளவன்.