எங்களுக்கு இடையே எந்த விரிசலும் இல்லை: ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி

மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் திமுகவுக்கும் மது ஒழிப்புக் கொள்கையில் உடன்பாடு உள்ளது. நீங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் நாங்கள் பங்கேற்போம்
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

கடந்த சில நாட்களாக மது ஒழிப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அடுத்தடுத்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியவை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (செப்.16) காலை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார் திருமாவளவன்.

இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து விசிக மகளிரணி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து எடுத்துரைத்தார் திருமாவளவன். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் திருமாவளவன். அதில் அவர் பேசியவை பின்வருமாறு:

`மாண்புமிகு முதல்வர் அவர்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தமிழகத்துக்குத் திரும்பிய நிலையில், அவரைச் சந்தித்து எங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்தோம்.

அக்டோபர் 2-ல் விசிக மகளிரணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. மருத்துவக் காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகிற போதை மருந்துகளைத் தவிர, நுகர்வுக்கான எந்த ஒரு போதைப் பொருளும் பயன்பாட்டில் இருக்கக்கூடாது அவற்றைத் தடை செய்யவேண்டும் என்று கூறுகிறது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 47.

அதை நடைமுறைக்குக் கொண்டுவர இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை அளித்தோம். மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் திமுகவுக்கும் மது ஒழிப்புக் கொள்கையில் உடன்பாடு உள்ளது. நீங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்கள் கட்சி சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கையை உங்களுடன் சேர்த்து நாங்களும் இந்திய ஒன்றிய அரசிடம் எடுத்துச் சென்று அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். மதுவிலக்கு நடைமுறைக்கு வருவதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை, நிர்வாகச் சிக்கலைக் கருத்தில்கொண்டு அதைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவோம் என்று அவர் உறுதியளித்தார்.

தேர்தலுக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விசிகவுக்கும் திமுகவுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை, எந்த நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம், அதை முன்னிறுத்துகிறோம், அவ்வளவுதான்’ என்றார்.

இன்று காலை, சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமாவளவன், `மாநாட்டின் முதன்மையான நோக்கங்கள் இரண்டு. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளை படிப்படியாகக் குறைத்திட வேண்டும். இரண்டு, மது ஒழிப்பு தேசியக் கொள்கையை வரையறுக்க அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்துக் குரல் எழுப்ப வேண்டும்’ என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in