கோவையில் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

"இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்கிற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. காரணம், நிறைய பாஜக வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது."
கோவையில் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை
படம்: https://twitter.com/ANI

கோவையில் ஏறத்தாழ 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகப் புகார்கள் வந்தன. ஆனால், அவை சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"கோவையில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றாலும், வாக்காளர் பட்டியலில் ஏறத்தாழ 1 லட்சம் வாக்காளர்களினுடைய பெயர்கள் விடுபட்டுள்ளன. இது மிகவும் சோகமான விஷயம்.

அங்கப்பா பள்ளியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுபோல பெயர்கள் விடுபடுவது இயல்புதான். ஆனால், இந்த முறை இவ்வளவு பெரிய அளவில் திட்டமிடப்பட்டு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றால், தேர்தல் ஆணையம் என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மலேசியா, மஸ்கட் என வெவ்வேறு இடங்களிலிருந்து வாக்களிக்க வந்தவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இதற்கான சரியான தீர்வு என்னவென்பதை நாங்களும் தேடி வருகிறோம்.

1,350 வாக்காளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது என்றால், எதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. எனவே, இந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக் கேட்கிறோம்.

இதற்கு தேர்தல் அதிகாரியிடமும் சரியான பதில் இல்லை.

இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்கிற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. காரணம், நிறைய பாஜக வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான முறையில் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், இவையனைத்தையும் தாண்டி மக்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கிறார்கள்.

இவையனைத்தையும் ஒரு மனுவாகக் கோர்க்க வேண்டும். இதை எதிர்த்து முறையிடவுள்ளோம்" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in