தேர்தல் ஆணையத்திடம் 7 கேள்விகளை எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின்! | MK Stalin

"வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?"
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மைக் காலமாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து வாக்குத் திருட்டு நடைபெறுவது எப்படி எனத் தரவுகளை முன்வைத்து குற்றம்சாட்டினார். பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதாவது: இங்கே க்ளிக் செய்யவும்...

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்தல் ஆணையத்திடம் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

"இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.

பின்வரும் கேள்விகள் எழுகின்றன

  1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

  2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

  3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பிஹார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

  4. பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?

  5. 01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

  6. வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

  7. 'நியாயமான தேர்தல்கள்' என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?"

என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

MK Stalin | TN CM MK Stalin | Election Commission | Gyanesh Kumar | Election Commission | CEC | Chief Election Commissioner

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in