
அரசியல் கட்சிகளிடத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக விமர்சித்தார். வாக்குத் திருட்டு எப்படி நடைபெறுகிறது என உதாரணங்களைக் காட்டி தரவுகளை முன்வைத்து செய்தியாளர் சந்திப்பையும் ராகுல் காந்தி நடத்தினார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். தேர்தல் ஆணையத்தால் இறந்துபோனவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்ததாகக் காணொளியை வெளியிட்டு பிஹார் நடவடிக்கையையும் விமர்சித்து வருகிறார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது மறுத்து வந்தாலும், விரிவான விளக்கம் எதுவும் தேர்தல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்திப்பார் என சனிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது:
"அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனும் 18 வயதைப் பூர்த்தி செய்யும்போது, வாக்காளராக வேண்டும். கட்டாயம் வாக்களிக்க வேண்டும். சட்டத்தின்படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலமே ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிறக்கிறது. அப்படி இருக்கையில், அதே அரசியல் கட்சிகளிடத்தில் தேர்தல் ஆணையம் எப்படி பாரபட்சம் காட்டும்?
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சியும் எதிர்க்கட்சி இல்லை. அனைத்துக் கட்சிகளும் சமம். யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்புக் கடமைகளிலிருந்து பின்வாங்காது.
தேர்தல் ஆணையத்தின் கதவுகள் எப்போதும் அனைவருக்கும் சமமாகவே திறந்து வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் பிஹாரில் தொடங்கப்பட்டுள்ளது. 1.6 லட்சம் வாக்குச் சாவடி முகவர்கள் வரைவுப் பட்டியலைத் தயாரித்தார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தயாரிக்கப்பட்ட வாக்காளர் வரைவுப் பட்டியல், அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்களுடைய கையெழுத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டது. வாக்காளர்கள் மொத்தம் 28,370 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.
மக்களவைத் தேர்தல் பணிகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 10 லட்சத்துக்கும் வாக்குச் சாவடி முகவர்கள், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள் தேர்தலுக்காகப் பணியாற்றுகிறார்கள். இதுபோன்ற வெளிப்படையான நடைமுறையில் எப்படி வாக்குகளைத் திருட முடியும்?
மக்களவைத் தவறாக வழிநடத்த வாக்குத் திருட்டு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.
கடந்த 20 வருடங்களாக அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்குத் தீர்வு காணவே வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலிலுள்ள பிழைகளைத் திருத்த அனைத்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பங்களித்து வருகின்றன.
களச் சூழலில், அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்கள், வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் இணைந்து வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களும் இதற்கான சான்றுகளைக் கொடுக்கிறார்கள். அவை அரசியல் கட்சிகளைச் சென்றடைவதில்லை அல்லது தவறான தகவல்கள் வேண்டுமென்று பரப்பப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு, வாக்காளர்கள் பலருடைய புகைப்படங்கள் அவர்களுடைய முன் அனுமதி இல்லாமல் ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். தாய், மருமகள், மகள்கள் உள்ளிட்டோருடனான ஒரு வாக்காளரின் சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா? வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே தங்களுடைய வாக்குகளைச் செலுத்தியுள்ளார்கள்.
வாக்காளர்கள் சிலர் இருமுறை வாக்களித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு ஆதாரங்கள் கேட்டால், பதில் இல்லை. இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையமோ வாக்காளரோ அஞ்சவில்லை. தேர்தல் ஆணையத்தைத் துப்பாக்கி முனையில் வைத்து வாக்காளர்களைக் குறிவைத்து அரசியல் செய்தால், தேர்தல் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. ஏழைகள், பணக்காரர்கள், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட எல்லா தரப்பு மற்றும் எல்லா மதங்களைச் சேர்ந்த வாக்காளர்களுடன் தேர்தல் ஆணையம் எந்தப் பயமுமின்றி பாரபட்சமில்லாமல் உறுதியாகத் துணை நிற்கிறது, இனியும் துணை நிற்கும்.
தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவுகளை அறிவித்த பிறகும்கூட, 45 நாள்களுக்குள் உச்ச நீதிமன்றத்தை நாடி தேர்தலை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளுக்கு சட்டத்தில் இடம் உண்டு. தேர்தல் முடிந்த 45 நாள்களில் எந்தவோர் அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ முறைகேட்டைக் கண்டறியவில்லை. இத்தனை நாள்களுக்குப் பிறகு இன்றைக்கு கோருகிறார்கள். இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால், வாக்காளர்கள் மற்றும் மக்களுக்கு இதன் உள்நோக்கம் புரியும்.
மெஷின் ரீடபிள் வாக்காளர் பட்டியலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை, அது வாக்காளர்களின் தனியுரிமையை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கடந்த 2019-ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் இதர மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தத்தை எப்போது மேற்கொள்ளலாம் என்பதை மூன்று தேர்தல் ஆணையர்கள் முடிவு செய்வார்கள்" என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
மேலும், தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் கூறினார்.
"பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இதில் மூன்றாவது வாய்ப்பே கிடையாது. 7 நாள்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்" என்று ஞானேஷ் குமார் கெடு விதித்துள்ளார்.
Election Commission | Chief Election Commissioner Gyanesh Kumar | CEC Gyanesh Kumar | Gyanesh Kumar | Bihar SIR | SIR | Special Intensive Revision | Rahul Gandhi | Congress | Vote Theft |