நந்தன்: அண்ணாமலை பாராட்டு!

தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது நந்தன்.
நந்தன்: அண்ணாமலை பாராட்டு!
1 min read

இரா. சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள நந்தன் திரைப்படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா. சரவணன், அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் 'நந்தன்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது. ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் படம் நிறைய பேருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்தப் படத்தை ஓடிடி மூலம் பார்த்து பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

"ஓடிடி தளத்தில் 'நந்தன்' திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரா. சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in