
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளனர் தமிழக, ஆந்திர முதல்வர்கள்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட துவார தரிசனத்துக்கான பொதுமக்களுக்கு இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதற்காகத் திருப்பதியில் அமைக்கப்பட்ட கவுண்டர்களில் இன்று (ஜன.9) காலை முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் காம்பிளக்ஸில் அமைக்கப்பட்ட கவுண்டரில் இலவச தரிசன டிக்கெட்டை பெற, நேற்று (ஜன.8) இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் மேச்சேரியைச் சேர்ந்த மல்லிகா உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இதனால் சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், `சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா (55) நேற்று திருமலை திருப்பதி கோயில் சொர்க்கவாசல் திறப்புக்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்துக்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், மல்லிகாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.