காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை

சமூகத்தைக் குறிவைத்துத் தாக்குவது, தனி நபர்களைக் குறிவைத்து தாக்குவது வட மாநிலங்களில் அதிகம். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இது பெரிதாக தலைதூக்கிவருகிறது.
காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி: செல்வப்பெருந்தகை
1 min read

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தியதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்தார். செல்வப்பெருந்தகையின் பேட்டி பின்வருமாறு:

`காங்கிரஸ் கட்சி இந்த உலகத்திலேயே இல்லாத சித்தாந்தம் உடைய கட்சி. பத்து நாட்களாக நாங்கள் எதுவுமே செய்யவில்லை. அண்ணாமலை பேசுகிறார் காங்கிரஸ் கட்சி துடிப்பாகிவிட்டது. நாங்கள் யாரைப் பற்றியாவது பேசுகிறோமா? நாங்கள் அரசியல் பேசுகிறோம். உண்மையைப் பேசுகிறோம், நேர்மையாக பேசுகிறோம். ஆனால் அவர் தனி நபர் தாக்குதல் நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தோழர்கள், தலைவர்கள் ஆகியோரின் அப்பா, தாத்தா, மூதாதையர்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். இந்த மண்ணை நேசிப்பவர்கள். ஒரு வார்த்தை பேசி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை துடிப்பாக்கியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தியவர் அண்ணாமலைதான். அவருக்கு நன்றி. இதே போல (அவர்) என்னை தனி நபர் தாக்குதல் நடத்தவேண்டும். எங்கள் கட்சி வலிமை அடைய வேண்டும்.

மனிதர்களின் வாழ்க்கையே நிரந்தரம் கிடையாது. எல்லோரையும் கடிக்கலாம், குதறலாம், வாய்க்கு வந்தபடி பேசலாம், வயது வரம்பின்றி பேசலாம், இறந்து போன தலைவர்களைக் கொச்சைப்படுத்தலாம் என்பதை இங்கிலாந்து நாட்டின் தேர்தல் முடிவுகளைப் பார்த்து அவர் யோசிக்க வேண்டும். யாரும் நிரந்தரமாக ஆளமுடியாது, யாரும் நிரந்தரமாக தோற்கவும் முடியாது.

எப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் வந்ததோ, ஒரு சமூகத்தைக் குறிவைத்துத் தாக்குவது, தனி நபர்களைக் குறிவைத்து தாக்குவது வட மாநிலங்களில் அதிகம். இது தமிழ்நாட்டில் குறைவு. ஆனால் இப்போது ஒரு 2 வருடமாக தமிழ்நாட்டில் இது பெரிதாக தலைதூக்கிவருகிறது. தமிழ்நாட்டு மக்கள் இதை தலைதூக்க விடமாட்டார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in