

தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 மார்ச் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இடம்பெறுகிறது. இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் (25 தொகுதிகள்), மதிமுக. (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (6), இந்திய கம்யூனிஸ்டு (6), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), தமிழக வாழ்வுரிமை கட்சி (1), மக்கள் விடுதலை கட்சி (1), ஆதித்தமிழர் பேரவை (1), அகில இந்திய பார்வர்டு பிளாக் (1) ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. இதில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதையடுத்து அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள, தில்லி தலைமை உருவாக்கிய ஐவர் குழு இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
”காங்கிரஸ் தலைமையில் ஐவர் குழுவை அமைத்தார்கள். இந்தக் குழு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சந்திப்பு மிகப்பெரிய முன்னுதாரணம். எங்களைச் சந்தித்ததில் முதலமைச்சர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் கிரீஷ் சோடகரை முதலமைச்சர் சந்தித்தார். நாங்கள் நான்கைந்து தேர்தல்களாக வெற்றிக் கூட்டணியாக இருக்கிறோம். உங்களுக்கு ஏன் சந்தேகம்? திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதை எல்லாம் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
Tamil Nadu Congress Committee President Selvapperundhagai said that the India alliance is strong in Tamil Nadu.