காங்கிரஸ் விவகாரத்தில் தோழமைக் கட்சிகள் தலையிட வேண்டாம்: செல்வப்பெருந்தகை | Selvaperunthagai |

தவெக தலைவர் விஜயை பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்ததன் எதிரொலி...
செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)
செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)
1 min read

காங்கிரஸ் விவகாரத்தில் தோழமைக் கட்சிகள் தலையிட வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பலகட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் 8 அன்று காங்கிரஸின் முக்கிய நிர்வாகியும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரங்களுள் பெரும் சர்ச்சை ஆனது.

திமுக கூட்டணியில் பிரச்னை?

இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதையொட்டி, காங்கிரஸ் தலைமை தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் வட்டாரங்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை விளக்கம்

இந்நிலையில், அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நாங்கள் தோழமையோடு இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களை எந்த விதத்திலும் தலைகுணிய விட மாட்டோம். தமிழ் மண்ணுக்கு தலைகுணிவு ஏற்படும் வகையில் தமிழ்நாடு ஆசின் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டாம். தோழமைக் கட்சியாக உள்ள காங்கிரஸ் பேரியக்கம் அதனை அனுமதிக்காது. இதை நாங்கள் கடந்த சில நாள்களாக ஊடகங்களில் கூறி வருகிறோம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது

எங்கள் கட்சி பிரச்னையை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்தப் புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம், தெரிவித்து விட்டோம். இது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என முழுமையாக நம்புகிறோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், தோழமை கட்சிகளும் உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம். தோழமைக் கட்சிகள் இதை இத்தோடு விட்டுவிட வேண்டும். இதை பெரிதுப்படுத்த வேண்டாம்” என்றார்.

Summary

Tamil Nadu Congress Committee President Selvaperunthagai has urged allied parties not to interfere in Congress matters.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in