இன்று (செப்.11) இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குச் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசியவை பினவருமாறு:
`எங்களுக்கு மதுரை மாவட்டத்தில் சரியான முறையில் பாதுகாப்பு அளித்தனர். சிவகங்கையில் சரியான முறையில் பாதுகாப்பு அளித்து அழைத்து வந்தனர். ஆனால் ராமநாதபுரத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் வந்தனர். அவர்கள் சரியான முறையில் நடத்தப்படவில்லை. இது வருத்தத்துக்குரியது.
ஏன் ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது? எங்கள் வருத்தத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். நாங்கள் கட்டுப்பாடுடன் இருக்கிறோம், இந்த நிகழ்வு மனநிறைவுடன் முடிந்திருக்கிறது. ஒரு வேளை கட்டுப்பாடு இல்லாமல் தள்ளுமுள்ளு நடத்திருந்தால் இதற்கு யார் பொறுப்பேற்பது?
இனி வரும் காலங்களில் ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை சரியாகச் செயல்பட வேண்டும். ஆங்காங்கே நிற்க வைப்பது, தலைவர்களைச் சிறைபிடிப்பதுபோல் நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நானே வருகிறேன் பாதுகாப்புக்காக யாரும் கிடையாது. மதுரை, சிவகங்கையில் சரியான முறையில் அழைத்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறைக்கு என்ன பிரச்னை? ஏன் இவ்வளவு அலட்சியப்போக்கு?’ என்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார் .