
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தொண்டனாகப் பணியாற்றவும் தயார் என்ற வார்த்தையை தில்லியில் கூறியதாக பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதன் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை தில்லியில் முகாமிட்டார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 30) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அப்போது அதிமுக-பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது,
`அதை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. காரணம், எங்களின் தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ்ஜி ஆகியோரிடம் தமிழக பாஜக தொண்டர்களின் கருத்தை தலைவர் என்ற முறையில் நான் பிரதிபலித்திருக்கிறேன்.
இன்றைக்கு தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது, அது எவ்வாறு மாறியிருக்கிறது? நேற்று வெளியான சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில், மாநிலத்தின் முதல்வருக்கான ஆதரவு வெறும் 27 சதவீதம் மட்டுமே உள்ளது. மோசமான முதலமைச்சராகவே இருந்தாலும், ஒருவருக்கு 40 முதல் 43 சதவீத ஆதரவு இருக்கும். நல்ல முதல்வருக்கு 65 சதவீதம் வரை ஆதரவு கிடைக்கும்.
நான்கில் ஒருவர் மட்டுமே முதல்வருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். எங்கள் கள ஆய்வும் அதையேதான் சொல்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்துப் பகுதி மக்களும் ஒரே முறையில் வாக்களிப்பது இல்லை. வாக்கு செலுத்துவதில் தென் தமிழகம், கொங்குப் பகுதி, மத்திய மண்டலம், டெல்டா பகுதி, சென்னை மண்டலம் ஆகியவை வெவ்வேறாக உள்ளன.
ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால், 5 மண்டலங்களில் 3 மண்டலங்களை கைப்பற்றவேண்டும். இதைச் செய்யாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்த கட்சியின் தலைவனாக, தொண்டனாக அனைத்தையும் பகுப்பாய்வு செய்வதே என்னுடைய வேலை. நான் எப்போதுமே மேம்போக்காகப் பேச முடியாது.
நான் (தில்லியில்) பேசியதை பத்திரிகை நண்பர்களிடம் பேசினால் அது நன்றாக இருக்காது. ஆழமாக, ஆதாரத்தின் அடிப்படையில் எப்படித் தமிழ்நாடு இருக்கிறது, எப்படிச் செல்லவேண்டும் என்பது குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். அதனால் கூட்டணி குறித்து எதுவும் நான் பேச விரும்பவில்லை.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை இறுதிக் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை தமிழகம் நன்றாக இருக்கவேண்டும். அதேநேரம் பாஜகவுக்கான வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. பாஜகவின் வளர்ச்சி எனக்கு முக்கியம். இந்த விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை எப்போதுமே நான் வெளிப்படையாக பேசி வந்திருக்கிறேன். தில்லியில் பேசும்போது தொண்டனாகப் பணியாற்றவும் தயார் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறேன்.
அதன் பொருளையும் உணர்ந்துகொள்ளுங்கள். அதிகாரத்திற்காக அல்ல, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வந்தேன்’ என்றார்.