ரஞ்சி கோப்பையில் தமிழக அணி ஏமாற்றம்! | Ranji Trophy | Tamil Nadu |

இரட்டைச் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரட்டைச் சதமடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பிரதோஷ் ரஞ்சன் பால் (கோப்புப்படம்)படம்: https://x.com/TNCACricket
2 min read

ரஞ்சி கோப்பையில் நாகாலாந்துக்கு எதிராக 512 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியாமல் ஆட்டம் டிரா ஆனது தமிழகத்துக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

ரஞ்சி கோப்பைப் போட்டியில் எலைட், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது தமிழக அணி. கோவையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜார்க்கண்டை எதிர்கொண்டது ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸ் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 173 ரன்கள் விளாசினார். தமிழக அணியோ முதல் இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு சுருண்டது.

பிறகு, ஃபாலோ ஆன் ஆன தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 213 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், ஜார்க்கண்ட் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியைப் பெற்றது.

தமிழக அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் நாகாலாந்தை பெங்களூருவில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையில் தமிழக அணி களமிறங்கியது. முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்ததால், பிளேட் குரூப்பிலிருந்து எலைட் குரூப்புக்கு முன்னேற்றம் கண்டுள்ள நாகாலாந்துக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் தமிழக அணி இருந்தது.

டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்டர் விமல் குமார் 189 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பேட்டராக களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதமடித்து 201 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 512 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது தமிழக அணி. முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோர் என்பதால், தமிழக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஆனால், நாகாலாந்தும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறி பேட்டிங்கில் கலக்கியது. அந்த அணியின் தொடக்க பேட்டர் டெதா நிஷல் 175 ரன்கள் குவித்தார். 7-வது பேட்டராக களமிறங்கிய இம்லிவாடி லெம்டூர் 146 ரன்கள் எடுத்தார். அந்த அணி 446 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதற்குள் நான்கு நாள்கள் முடிந்து ஆட்டம் டிரா ஆனது.

நாகாலாந்துக்கு எதிராக வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் மேலேறிச் செல்ல வேண்டும் என்ற முனைப்பிலிருந்த தமிழகத்துக்கு இந்த டிரா என்பது பெரும் ஏமாற்றமும் பின்னடைவும் தான். இரு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் தோற்று ஒன்றை டிரா செய்துள்ள தமிழக அணி ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த விதர்பாவை நவம்பர் 1 அன்று கோவையில் எதிர்கொள்கிறது.

Summary

Ranji Trophy 2025: Nischal and Lemtur’s Heroics Help Nagaland Hold Tamil Nadu to a Draw

Tamil Nadu | Ranji Trophy | Nagaland | Elite Group A | Sai Kishore | Pradosh Ranjan Paul | Vimal Khumar | Dega Nischal | Imliwati Lemtur |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in