இது அதானியின் அரசு: கோவையில் ராகுல் காந்தி பேச்சு

அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதனை மோடி கொடுத்துவிடுவார்...
ராகுல் காந்தி
ராகுல் காந்திANI

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக இன்று தமிழ்நாடு வந்துள்ளார் ராகுல் காந்தி.

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பரப்புரை மேற்கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“மோடியின் அரசு ஆட்சியை விட்டுப் போக வேண்டிய நேரம் இது. மத்தியில் இருப்பது மோடி அரசு இல்ல. இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதனை மோடி கொடுத்துவிடுவார்.

நான் அதானி குறித்த பிரச்னையை பேசியவுடன், எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. எனது அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. எனக்கு அந்த வீடு தேவையில்லை. தமிழ்நாட்டில் எனக்குப் பல லட்சம் வீடுகள் உள்ளன. தமிழர்களின் வீடுகளில் எனக்காகக் கதவுகள் திறந்திருக்கும்.

பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, தில்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என மோடி பேசுகிறார். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை.

தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்பதுதான் அவர்களின் கேள்வி. அவர் ஏன் ‘ஒரே நாடு ஒரே மொழி’ என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறார்? தமிழ், பெங்காலி, கன்னடம், மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் அவர் பேசக்கூடாது?. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

எனது மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலின். நான் வேறு எந்த அரசியல் தலைவர்களையும் அண்ணன் என அழைத்ததில்லை.

தேர்தல் பத்திரம் மூலம் நிதியைப் பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விவரங்கள் வெளியாகின.

பாஜக ஆட்சியில் தான் வேலையின்மை அதிகரித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கே விடப் போகிறோம். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்றார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in