
வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தக வெளியீட்டு விழா குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளிவந்துள்ளதாக பேட்டியளித்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். இன்று (நவ.9) அவர் பேசியவை பின்வருமாறு,
`2011-ல் கட்சி மறுசீரமைப்புக்கான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம். அனைவரின் ஒப்புதலோடு இப்போது நாங்கள் அதை நடைமுறைப்படுத்தப்போகிறோம். வருவாய் மாவட்டம் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகம் இல்லாமல், தேர்தல் மாவட்டம் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் ஒரு முயற்சி இது.
234 தொகுதிகளையும், 234 தொகுதி மாவட்டமாக நாங்கள் அறிவிக்க இருக்கிறோம். இதன் அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை உருவாக்குகிறோம். போட்டி அடிப்படையில் பதவி வழங்கப்படுவது அல்ல, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்து விரைவில் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம்.
டிசம்பர் 6-ல் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு யாரையெல்லாம் அழைப்பது என்று விகடன் பதிப்பகம்தான் முடிவு செய்யும். யார் யார் பங்கேற்கிறார்கள் என அவர்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு நாளேடு திடுமென பேசிக்கொண்டிருந்த தகவலை உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக வெளியிட்டிருக்கிறது.
விகடன் பதிப்பகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்போதுதான் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது தெரியவரும். அதற்கு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருக்கிறது. அம்பேத்கர் நினைவு நாளில் புத்தகத்தை வெளியிட அவர்கள் தேதி குறித்திருக்கின்றனர். நான் இந்த நிகழ்வுக்கு வருவதாகத் தெரிவித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது.
முதல்வர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட இருக்கிறார் என அப்போது அவர்கள் கூறினார்கள். ராகுல் காந்தியைக் கூட நாங்கள் அழைக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். அதைத்தான் சமீபத்தில் நான் குறிப்பிட்டேன்’ என்றார்.