சொத்துவரி முறைகேடு: மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராஜினாமா?

Madurai Property Tax Malpractice: இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முன்னாள் உதவி ஆணையர் உள்பட 8 பேரைக் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் - கோப்புப்படம்
1 min read

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு(Madurai Property Tax Malpractice) தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த மண்டலத் தலைவர்களும், நிலைக்குழு தலைவர்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயம் செய்து, பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஓய்வு பெற்ற மாநகராட்சி உதவி ஆணையர் ரெங்கராஜன், அவரது உதவியாளர் கார்த்திகேயன், கணினி ஆபரேட்டர் சதீஷ், 3-வது மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வியின் உதவியாளர் தனசேகரன் உள்பட 8 பேரைக் கைது செய்தனர்.

அத்துடன், மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் ஷர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க : இளைஞர் காவல் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமனம்

கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த ஆவணங்கள், மாநகராட்சி ஊழியர்கள் சிலர் அளித்த தகவல்கள், மாநகராட்சியில் நடைபெற்ற சொத்து வரி மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் ரகசியமாக அளித்த ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை தயார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 8) மதுரைக்குச் சென்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு (KN Nehru), மாவட்ட அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் உள்ளிட்டோருடன் இணைந்து மேயர் இந்திராணி (Madurai Mayor Indrani), மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் ஷர்மா, சுவிதா மற்றும் நகரமைப்பு குழுத் தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோரிடம் இருந்து அவர்கள் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன். வசந்த், கடந்த மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in