கன்னடம் குறித்து கமல் பேசியதில் தவறில்லை: அமைச்சர் கே.என். நேரு

தன்னலமற்ற நமது இராணுவம் தேசத்திற்காகப் போராடும்போது, ​​சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள்.
கே.என். நேரு - கோப்புப்படம்
கே.என். நேரு - கோப்புப்படம்
1 min read

கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல் ஹாசன் பேசியதில் தவறில்லை என்று தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு கருத்து தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தின் இடை வெளியீட்டு விழாவில், தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் கமல் ஹாசன் பேசியது சர்ச்சையானது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து எக்ஸ் கணக்கில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`தன்னலமற்ற நமது இராணுவம் தேசத்திற்காகப் போராடும்போது, ​​சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள். அவரது (கமல் ஹாசன்) வார்த்தைகள் அவசியமற்றவை. நீண்ட கடிதங்களுக்குப் பதிலாக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்றார்.

இந்நிலையில், திருச்சியில் இன்று (ஜூன் 4) நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் மற்றும் கே.என். நேரு கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

(செய்தியாளர் கேள்வி) கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்து..

இதற்கு பதிலளித்து அமைச்சர் நேரு கூறியதாவது, `அவர் சொல்லுவார், ஆனால் யாரும் அதை விரும்பவில்லை. அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் இருந்துதான் அனைத்தும் வந்துள்ளன; தெலுங்கு மலையாளம் அனைத்தும் இதில் இருந்துதான் வந்துள்ளன.

அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். அது குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in