திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் குறைபாடா?: திண்டுக்கல் தனியார் நிறுவனம் விளக்கம்

நாங்கள் அனுப்பிய நெய்யின் பரிசோதனைத் தரச்சான்றிதழ்கள் உள்ளன. உணவுப் பாதுகாப்புத்துறை மேற்கொண்ட பரிசோதனையிலும் எங்கள் நெய் தரமிக்கது என்ற அறிக்கை இருக்கிறது
திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் குறைபாடா?: திண்டுக்கல் தனியார் நிறுவனம் விளக்கம்
1 min read

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின்போது திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருப்பதிக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்தக் குறைபாடும் கிடையாது என்று திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் செய்தியார்களிடம் அளித்த பேட்டி பின்வருமாறு:

`கடந்த ஜூன், ஜூலை என இரு மாதங்கள் தொடர்ச்சியாக திருப்பதிக்கு நெய் அனுப்பினோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. எங்கள் நிறுவனத்தின் பெயரை உபயோகித்து செய்திகள் பரப்பப்படுகின்றன. எங்களுடைய தயாரிப்புகளில் குறை உள்ளது என்பதை யாராவது வெளிப்படுத்த விரும்பினால் எங்களின் நெய் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அதை பரிசோதித்துக்குக் கொள்ளலாம்.

எங்கள் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையிலும், தரத்திலும் எந்தக் குறைபாடும் இருக்காது. எங்கள் தயாரிப்புகளைப் பரிசோதித்தால் அவற்றைத் தெரிந்துகொள்ளலாம். 25 வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் நாங்கள் இருக்கிறோம். எப்போதும் எங்கள் தயாரிப்புகள் மீது இவ்வாறான கண்ணோட்டம் எழுந்தது கிடையாது.

ஜூன் மாதம் தொடங்கி 4 டேங்கர் லாரியில் நெய் அனுப்பினோம், ஒரு டேங்கருக்கு 15-16 டன் நெய் இருக்கும். திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிறைய நிறுவனங்கள் நெய் அனுப்புகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தால் வாங்கப்படும் நெய்யில், நாங்கள் அனுப்பிய நெய்யின் அளவு 0.1 சதவீத கூடக் கிடையாது. ஒவ்வொரு முறையும் இங்கிருந்து நெய் அனுப்புவதற்கு முன்பு அவற்றை நாங்கள் பரிசோதனை செய்திருக்கிறோம்.

தர ரீதியில் எங்களிடம் சரியான ஆதாரங்கள் உள்ளன. நெய் அனுப்பும்போது என்.ஏ.பி ஆய்வக அறிக்கையுடன்தான் அனுப்பினோம். நாங்கள் அனுப்பிய 4 டேங்கர் லாரி நெய்யின் பரிசோதனைத் தரச்சான்றிதழ்கள் எங்களிடம் உள்ளன. மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை மேற்கொண்ட பரிசோதனையிலும் எங்கள் நெய் தரமிக்கது என்ற அறிக்கை இருக்கிறது. எங்கள் நெய் தரக்குறைவானது என்பது எங்கும் நிரூபிக்கப்படவில்லை’ என்றார்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in