பிரதமர் மோடி தெய்வ மகன் கிடையாது: பிரகாஷ் ராஜ் சாடல்

"மேடையேற்றிய மக்களுக்கும் ஒரு சமுதாயத்துக்கும் பிரச்னை இருக்கும்போது ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், ஒரு சமுதாயம் கோழையாகிவிடும்."
பிரதமர் மோடி தெய்வ மகன் கிடையாது: பிரகாஷ் ராஜ் சாடல்

மக்களின் வலியைப் புரியாதவன் தெய்வ மகனாக இருக்க முடியாது, டெஸ்ட் டியூப் பேபி என பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் மறைமுகமாக சாடியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கும், காமராசர் கதிர் விருது இந்தியச் சமூக நீதி இயக்கம் எஸ்றா சற்குணத்துக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தொல்லியல் அறிஞர் சுப்பராயலுவுக்கும், காயிதேமில்லத் பிறை விருது எஸ்.என். சிக்கந்தருக்கும் வழங்கப்பட்டது.

அம்பேத்கர் சுடர் விருதைப் பெற்ற பிரகாஷ் ராஜ் விருது நிகழ்ச்சியில் பேசியதாவது:

"நான் ஏன் அரசியல் பேசுகிறேன் எனப் பலர் கேட்கிறார்கள். உடம்புக்கு ஒரு காயமானால், நாம் சும்மா இருந்தாலும் வலி குறைந்து காணாமல் போகும். ஆனால், ஒரு சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் காயம் ஏற்படும்போது, நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகும்.

நான் என்னுடையத் திறமையால் கலைஞனாகவில்லை. மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையால் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். மேடையேற்றிய மக்களுக்கும் ஒரு சமுதாயத்துக்கும் பிரச்னை இருக்கும்போது ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், ஒரு சமுதாயம் கோழையாகிவிடும்.

நான் செய்வது பெரிய வேலை அல்ல. அது என் கடமை. அது என் மனசாட்சி.

லங்கேஷ், மார்க்ஸ், அம்பேத்கர், காந்தி, பாரதி போன்றவர்களின் சிந்தனையைப் படித்து அதை உள்வாங்கியதால் எனக்குப் புரிதல் வந்துள்ளது. கடந்த 10 வருடங்களாகத்தான் நான் இந்த மன்னரை எதிர்த்துப் பேசி வருகிறேன்.

மன்னிக்கவும், தற்போது மன்னர் என்று சொல்ல முடியாது. அவர் தெய்வக் குழந்தை ஆகிவிட்டார். அவரை நாம் இனி தேர்ந்தெடுக்க முடியாது. அவரால் ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவரைத் திட்ட முடியாது. தெய்வம் சோதிக்குது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

ஒரு சர்வாதிகாரி விமானத்தில் வருகிறான், தேரில் நிற்கிறான், அனைவரும் பூ தூவுகிறார்கள். மக்கள் வேலிக்கு அந்தப் புறம்தான் நிற்கிறார்கள். நம்முடைய பசி அந்த சர்வாதிகாரிக்கு எப்போது புரியும். மக்களின் மனம் தெரியாத, வியர்வையைத் தொடாதவனுக்கு ஏதாவது புரியுமா?. அவன் தெய்வ மகன் கிடையாது, டெஸ்ட் டியூப் பேபி" என்றார் பிரகாஷ் ராஜ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in