சிதம்பரம் கோயில் நிலம் தனியாருக்கு விற்பனையா?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிதம்பரம் கோயில் நிலம் தனியாருக்கு விற்பனையா?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிதம்பரம் கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் தரப்பு குறைத்துக் காட்டுவதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை குற்றச்சாட்டை எழுப்பியது
Published on

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தீட்சிதர்களால் விற்பனை செய்யப்பட்டதாக தமிழக அறநிலையத்துறையால் எழுப்பப்பட்ட புகாரை அடுத்து, அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு சிதம்பரம் கோயில் நிர்வாகம் முழுமையாக தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் தரப்பு குறைத்துக் காட்டுவதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை குற்றச்சாட்டை எழுப்பியது. மேலும் இது குறித்த வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அறநிலையத்துறை.

அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சௌந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வு மேற்கொண்டது. உயர் நீதிமன்ற அமர்விடம் சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் கோயிலின் வரவு-செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் காணிக்கை வரவு, செலவு கணக்கைப் பராமரிக்க தனி திட்டத்தை வகுக்கத் தயார் எனவும் தீட்சிதர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற அமர்விடம் விசாரணையின்போது தெரிவித்தார்.

அப்போது தமிழக அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதம்பரம் கோயிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் ஏறத்தாழ 2,000 ஏக்கர் நிலத்தைத் தனி நபர்களுக்கு தீட்சிதர்கள் விற்றதாகக் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, கோயிலுக்குச் சொந்தமான தற்போது எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய சிதம்பரம் வட்டாட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2,000 ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனியாருக்கு விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் 2017-2018 நிதியாண்டு முதல் 2021-2022 நிதியாண்டு வரையிலான சிதம்பரம் கோயிலின் வரவு-செலவு கணக்குப் புத்தகங்களைத் தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை அடுத்து இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 3-க்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in