நீட் குளறுபடி: ஒரு தமிழ் மாணவர்கூட கருணை மதிப்பெண்களைப் பெறவில்லை!

"நீட் தேர்வை எழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்." - மா. சுப்பிரமணியன்.
நீட் குளறுபடி: ஒரு தமிழ் மாணவர்கூட கருணை மதிப்பெண்களைப் பெறவில்லை!
2 min read

தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதிய எந்தவொரு மாணவருக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விருப்பப்பட்டால், தேர்வை எழுதலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு, பழைய மதிப்பெண்ணிலிருந்து கருணை மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு அசல் மதிப்பெண்கள் மாற்றி வழங்கப்படும் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்சம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தமிழ்நாடு, இந்தக் குளறுபடி எழுந்ததைத் தொடர்ந்து, நீட்டுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் ஆணையம் அளித்த பரிந்துரைகள் 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன் தமிழ் மாணவர்கள் யாருக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

"2017-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வு நடைமுறைக்கு வரவில்லை.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, குழுவின் பரிந்துரைகளை சட்ட மசோதாவாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரிடமிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உள்துறை அமைச்சகமும், தமிழ்நாடு உயர்கல்வித் துறை, மருத்துவக் கல்வித் துறை மற்றும் ஆயுஷ் போன்ற பல்வேறு நிர்வாகங்களுக்கு சிறிய அளவிலான கேள்விகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த விளக்கங்களுக்கெல்லாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மூலம் பதில் அனுப்பப்பட்டு வருகிறது.

2020 நீட் தேர்வில் ஒரு மாணவர் மட்டுமே 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றார். 2021-ல் இரு மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றார்கள். 2022-ல் ஒருவர்கூட முழு மதிப்பெண்களைப் பெறவில்லை. 2023-ல் இரண்டு மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றார்கள். இந்த ஆண்டு 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். இதனால்தான் இதில் அதிகளவில் அச்சம் தென்படுகிறது.

நீட் தேர்வில் கேள்விக்குப் பதில் அளிக்காமல்விட்டால் 4 எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாகப் பதிலளித்தால் 5 எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படும். அப்படியிருக்க 718, 719 மதிப்பெண்களை எப்படி மாணவர்களால் பெற்றிருக்க முடியும்?. இப்படியிருக்க, கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்கமளித்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவதும் மிகப் பெரிய அளவிலான மோசடி.

1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பினால், மறுதேர்வு நடத்தலாம் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இப்படியாக நிறை குழப்பங்களும், குளறுபடிகளும் இருப்பதால், நாடு முழுக்க மருத்துவ மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், ஹரியாணாவில் ஒரு தேர்வு மையத்திலிருந்து மட்டும் 8 பேர் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளார்கள். இதில் 6 பேர் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். இது எப்படி சாத்தியம்?

இதனால், நீட் தேர்வை எழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். எனவே, நீட் தேர்வை ஒழிக்க ஒன்றிய அரசு முனைய வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தவொரு மாணவருக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை" என்றார் மா. சுப்பிரமணியன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in