கோவை வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் | MK Stalin |
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் காவல்துறையினர் சுட்டுப் பிடித்த குற்றவாளிகள் மூவருக்கும் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் 1 அன்று இரவு கல்லூரி மாணவர் ஒருவரும் அவரது ஆண் நண்பரும் காரில் இருந்துள்ளார்கள். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கினர். மேலும், மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று வேறொரு இடத்தில் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காவல்துறையினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆண் நண்பரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள பீளமேடு காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்துத் தேடி வந்தனர். இதற்கிடையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய குணா தவசி, சதீஷ் கருப்பசாமி மற்றும் கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரைத் துடியலூர் அருகே காவல்துறையினர் இன்று காலை சுட்டுப் பிடித்தனர். கால்களில் காயம் ஏற்பட்ட மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத்தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu Chief Minister M.K. Stalin has stated that he has ordered the police to acquire maximum punishment for the three accused arrested by the police in the Coimbatore gang rape incident.

